வாய் கிழிய பேசும் திருமாவளவன் அவர்களே..சனாதனம் நிலையானது, சமமானது என்பதை உணர்வீர்களா? பாஜக கேள்வி
வாய் கிழிய பேசும் திருமாவளவன் அவர்களே, சனாதனம் நிலையானது, சமமானது என்பதை உணர்வீர்களா? என்று கேட்கிறது பாஜக.
கிருஸ்துவம், இஸ்லாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு தருவதற்கு தடையாக இருக்கும் ஆணையை நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தினார்.
மக்களவையில் பேசிய போது அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் , அவர்களை பட்டியல் இனத்தவர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீட்டினை வழங்குவதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, ‘’அதற்கு முன்னர், கிருஸ்துவம் மற்றும் இஸ்லாத்தில் சாதிகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளன என்றும் அந்த மதங்களில் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. அதனால் சமூக நீதி தேவை என்றும் சொல்வீர்களா திருமாவளவன் அவர்களே?’’ என்று கேட்கிறார்.
மேலும், ’’சனாதனத்தை வேரறுப்போம் என்று வாய் கிழிய பேசும் திருமாவளவன் அவர்களே, மற்ற மத கடவுள்களை சாத்தான் என சொல்லும் அந்த மதங்களில் பேசப்படும் போலி சமாதானத்தை, அமைதியை வேரறுப்போம் என்று தைரியமாக கூறமுடியுமா? (இதையெல்லாம் கூறிவிட்டு, எதற்காக மதம் மாறினீர்களோ, அதன் நோக்கம் நிறைவேறாததால், மதம் மாறிய மக்களை மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும் என்ற அறைகூவல் விடுவீர்களா திருமாவளவன் அவர்களே? சனாதனம் நிலையானது, சமமானது என்பதை உணர்வீர்களா திருமாவளவன் அவர்களே?’’என்று கேட்கிறார்.