அடுத்தடுத்து 3 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள்... ஆடிப்போன யோகி ஆதித்யநாத்.. சூடு பிடிக்கும் உ.பி. தேர்தல்..
உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தடுத்து 3 அமைச்சர்கள் பதவி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் அடுத்த மாதம் (பிப்.10, பிப்.14, பிப்.20, பிப்.23, பிப்.27.,மார்ச் 3, மார்ச் 7) 7 கட்டங்களாக சட்டமன்ர தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எதிர் கட்சிக்கு தாவி வருகின்றனர்.
மீண்டும் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமரும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மார்தட்டிக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு இதுவரை 7 எம்.எல்.ஏக்கள் மற்றும் 3 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர். முதலில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மௌரியா நேற்று முன் தினம் பதவி விலகினார்.
அவரைத்தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாஜாகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சௌகான் நேற்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். தற்போது அமைச்சர் தரம் சிங் சைனியும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பின்னர் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்தார்.
தரம் சிங் சைனியும் சமாஜ்வாடியில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 3 அமைச்சர்கள் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏக்கள் பதவி விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கும் இந்த காலக்கட்டத்தில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகுவது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.