"அவன் பொருள வச்சே அவன போடனும்" - விழுந்தது அடுத்த விக்கெட்... பாஜகவுக்கு அடி மேல் அடி... கலக்கும் அகிலேஷ்!
கொரோனா ஒரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு நிகரான சூடு உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் கிளம்பியிருக்கிறது. எப்போதுமே பாஜக தான் மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுக்கும். ஆனால் உபியில் அகிலேஷ் யாதவ் பாஜகவுக்கே ஷாக் கொடுத்து வருகிறார். நேற்று மட்டுமே 1 அமைச்சர் உட்பட 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாகவே அடுத்த அதிர்ச்சியாக இன்னொரு அமைச்சரும் ராஜினாமா செய்திருக்கிறார்.
பொதுவாகவே தேர்தல் தேதி அறிவித்து கூட்டணி அமைப்பதற்கு முன்பாக ஒரு சிலர் அணி மாறுவார்கள், இன்னும் சிலர் ரிசல்ட் வந்தபிறகு யார் ஆட்சியில் அமர்கிறார்களோ அவர்கள் பக்கம் தொற்றிக்கொள்வார்கள். மேற்கு வங்க தேர்தல் அதற்கு சிறந்த உதாரணம். தேர்தல் நடக்கும் முன் திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய முக்கிய புள்ளிகள், மீண்டும் திரிணாமுல் ஆட்சி அமைத்ததும் மம்தாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து திரும்பி வந்தனர். தற்போது அதே பாணியிலான கட்சி தாவல்கள் தான் உபி மாநிலத்திலும் அரங்கேறி வருகிறது.
உபியில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இச்சூழலில் மாநிலத்தின் ஓபிசி சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் அக்கட்சியிலிருந்து நேற்று விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். அவரை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் ராஜினாமா செய்ய, அனைவரும் அகிலேஷ் யாதவை சந்தித்தினர். இச்சூழலில் அடுத்த விக்கெட்டாக அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் இன்று பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இவரும் ஓபிசி தலைவர் தான். அடுத்தடுத்து இரு ஓபிசி சாதியைச் சேர்ந்த அமைச்சர்கள் விலகியிருப்பது பாஜகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் ராஜினாமா கடிதத்தில், "ஓபிசி, தலித், விவசாயிகள் மீதான இந்த அரசின் அடக்குமுறை அணுகுமுறை, அவர்களுக்கு இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுவதால் மனவேதனை அடைந்து ராஜினாமா செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இவரும் அகிலேஷ் யாதவ்வை சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.