ஈபிஎஸ்-ஐ பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர் - வெல்லமண்டி நடராஜன்

 
வெல்லமண்டி

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 23-ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருபுறமும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒரு புறமும் குரல் எழுப்ப தொடங்கிய நிலையில் அவரவர் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது விளம்பர பதாகைகள் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், அவருடன் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன்,வைத்திலிங்கம்,வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன், அதிமுக தற்காலிக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஒபிஎஸ்ஸை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “ஒற்றை தலைமை குறித்து பேச தயார் என்று தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்த பெருமை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்யை சாரும். திடீரென்று ஒற்றே தலைமை தான் வேண்டும் என்று எடப்பாடியை  பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள், இரட்டை தலைமை தான் வேண்டும் என்று தன்னுடைய நிலைப்பாட்டை ஓபிஎஸ் சொல்லிவிட்டார்” எனக் கூறினார்.