எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் என்ன நடந்ததோ அதுதான் இப்போதும் நடக்கிறது... சசிகலா குமுறல்

 
sasikala

எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் என்ன நடந்ததோ அதுதான் தற்போதும் நடக்கிறது என்று சொல்லி மீண்டும் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சசிகலா.

 சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் சில மாதங்கள் அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருந்த சசிகலா பின்னர் அதிமுகவில் மீண்டும் களம் இறங்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து வருகிறார்.  அதிமுக தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடம் தனது மனக்குமுறல்களை பேசி, கட்சியினரின் மனக்குமுறல்களுக்கும் ஆறுதல் சொல்லி  அதை ஆடியோவாக வெளியிட்டு  தொடர்ந்து அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தார் சசிகலா.

  எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை ஜெயலலிதாவை காப்பாற்றிய கட்சியை ஒரு நாளும் வீணாய் போய்விட  என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் சும்மா விடமாட்டேன்.   அதிமுகவிற்கு  தலைமை ஏற்று கட்சியை  வழிநடத்தின் வெற்றி பெறச்செய்வேன் என்று தொடர்ந்து பேசி வந்த சசிகலா,  கொஞ்சநாள் அமைதியாக இருந்துவிட்டு தற்போது மீண்டும் அதிமுக பக்கம்  திரும்பியிருக்கிறார்.

sasi

 நமது எம்ஜிஆர் நாளிதழிலில் சசிகலா சொன்னதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘’ நம் ஒரே நோக்கம் இதயதெய்வம் அம்மா சொல்லிச் சென்றதை ஒவ்வொரு தொண்டனும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் .  மற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது.   புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருப்பவர்கள் கட்சியை விட்டு போக மாட்டார்கள்’’ என்று சொல்லி இருக்கும் சசிகலா,   ‘’ தொண்டர்களின் மனக்குமுறல்களை பார்த்தேன்.   இனியும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது. புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு புரட்சித்தலைவியின் கூட இருந்து இந்தக் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வந்தோம் ’’என்றவர்,  ‘’ புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு என்ன நடந்ததோ அதுதான் தற்போது நடக்கிறது.  அதனால்,  நான் கட்சிக்கு வந்து எல்லோரையும் நல்லபடியாக நடத்தி செல்ல வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு  பின்னர் அதிமுக இரு அணியாக பிரிந்து நின்ற நிலைமை தற்போது இருப்பதாகவும்,  மீண்டும் இரு அணிகளும் இணைந்தது போல் இணையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.