’’பொருளாதார புலி ப.சிதம்பரம் இதற்கு வாய் திறப்பாரா?’’
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதானி நிறுவனத்திற்கு கடன் வழங்கியதையும், எல்ஐசி அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதையும் குறிப்பிட்டு, ஐயோ, பொது துறை நிறுவனத்தின் பணம் இழப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு, அந்த நிறுவனங்கள் மிக தெளிவாக தாங்கள் எவ்வளவு கடன் கொடுத்தோம், எவ்வளவு முதலீடு செய்தோம் என்பதையும் எந்த வித இழப்பும் ஏற்படவில்லை என்பதை முறையே தெளிவுபடுத்தியும் 'குய்யோ, முறையோ' என கூச்சலிட்டு பாராளுமன்றத்தை செயல்பட அனுமதிக்க மறுத்து ஜனநாயக படுகொலையை செய்து கொண்டிருக்கின்றன என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.
ஆனால், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், கிங் ஃபிஷர், லேன்க்கோ இன்ஃப்ரா, பூஷன் ஸ்டீல், ஜே பி அஸோஸியேட்ஸ், யூனிடெக், மோனெட் இஸ்பாட் மற்றும் ஐ வி ஆர் சி எல் போன்ற நிறுவனங்களில் இதே எல் ஐ சி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முதலீடு செய்ததோடு பல நூறு கோடிகளை இழக்க செய்ததா இல்லையா என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்கும் நாராயணன்,
இந்த நிறுவனங்கள் அனைத்துமே மிக பெரிய இழப்பை பொது துறை நிறுவனங்களுக்கு உண்டாக்கியதற்கு காரணம் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தான் என்று ஏற்றுக்கொள்வார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
ஏதோ, பொது துறை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற நாடகத்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிறுத்தி கொள்வதோடு, பொது துறை நிறுவனங்களின் செல்வத்தை, மக்கள் பணத்தை இழக்க செய்ததற்கு மக்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். பொருளாதார புலி என்று மார்தட்டி கொள்ளும் ப.சிதம்பரம் வாய் திறப்பாரா?என்றும் அவர் கேள்வியை எழுப்பி இருக்கிறார்.