ஆட்டோ சின்னம் ரஜினி கட்சியின் வெற்றிக்கு உதவுமா? #Rajini
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ரஜினி தரப்பில் மக்கள் சேவை கட்சி எனும் பெயரில் விண்ணப்பம் வைத்ததற்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்டோ சின்னம் ரஜினி கட்சியின் வெற்றிக்கு உதவுமா என்பது பற்றிப் பார்ப்போம்.
ரஜினி நேரடியாக அரசியல் பேச்சில் ஈடுபட்டது 1996-ல்தான். ஆம், பாட்ஷா பட விழாவில் அப்போது ஆண்ட அதிமுக ஆட்சி மீது விமர்சனம் கூறியதால், பல விளைவுகளை எதிர்கொண்டார் ரஜினி. அதனால், 1996 சட்டமன்ற தேர்தலின்போது ‘அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்தால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என்று தெரிவித்திருந்தார். அப்போது அவர் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்க நிலையில் வேறு முடிவை எடுத்தார்.
ரஜினியின் நண்பர் சோ ஆலோசனை படி, திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்தார். அப்போது காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது. அதில் உடன்பாடு இல்லாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கருப்பையா மூப்பனார், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தனியே பிரிந்து வந்து ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ எனும் கட்சியைத் தோற்றுவித்தனர். இக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தது.
ரஜினியின் ஆதரவை தங்கள் கட்சிக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினைத்த த.மா.கா தங்களின் தேர்தல் சின்னமாக, நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார் என்பதால்), ஆட்டோ (பாட்ஷா படத்தில் ரஜினியின் அடையாளம்), சைக்கிள் (அதற்கு முன் வெளியான ரஜினி படமான அண்ணாமலையில் ரஜினியின் அடையாளம்) என்பதாகக் கேட்டிருந்தது.
தமாக சார்பில் ஆட்டோ அல்லது நட்சத்திரம் என்பதுதான் விருப்பமாக இருந்தது. ஆனால், சைக்கிள் சின்னமே ஒதுக்கப்பட்டது. அதையும் தமிழகம் முழுவதும் கொண்டு பரப்பியது அக்கட்சி. அந்தத் தேர்தலில் 39 தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வென்றது.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது மூப்பனார் தம் கட்சிக்கு விரும்பிய சின்னம் ஆட்டோ. ஆனால், அது பாட்ஷா வெளியான நேரம் என்பதால் பொருத்தமாக இருக்கும். இப்போது ஏற்றதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.
கமல்ஹாசன் நடித்து 1982-ல் சகலாவல்லவன் படம் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள ‘ஹேப்பி நியூ இயர்’ பாடல்தான் இன்றுவரை அனைத்து புத்தாண்டுகளின்போது ஒலிப்பரப்பப்படுகிறது. அதேபோல, ஒவ்வோர் ஆண்டு ஆயுதபூஜையின்போதும் பாட்ஷாவின் ஆட்டோக்காரன் பாடல் எங்கும் ஒலிக்கிறது. எனவே, அந்தப் பாடலுக்கு ஆயுள் அதிகம். அதனால், ஆட்டோ என்றதும் ரஜினி என்பதும் நினைவுக்கு வரும் என்பதும் யதார்த்தம்.
எனவே, ரஜினியோடு எளிதில் அடையாளப் படுத்தும் சின்னமாக ஆட்டோ இருப்பது அவருக்கு பலமே. ஆனால், சுவர்களில் ஈஸியாக இதை வரைய முடியாது. கைகளில் இதை ஓர் அடையாளமாகக் காட்ட முடியாது என்பது சிறு பின்னடைவு. அதனால்தான், ரஜினி தரப்பில் இரு விரல் அல்லது பாபா முத்திரை சின்னம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், மக்கள் மனதில் ஆட்டோ சின்னம் பதிய வைப்பதில் பெரிய குழப்பம் வராது.