"ஒரு கை பாத்திடலாம்"... கோதாவில் இறங்கிய யோகி; இங்க தான் நிக்கிறாராம்? - முதற்கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் ரிலீஸ்!
தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே உத்தரப் பிரதேசம் சூடாகவே இருந்தது. ஆட்சி அதிகாரத்தின் அந்திம காலத்தில் இருந்த யோகி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பல கிம்மிக்ஸ்களை காட்டினார். பிரதமர் மோடியும் பல்வேறு திட்டங்களை தூசி தட்டி அடிக்கல் நாட்டினார். அதேபோல வேளாண் சட்டங்களும் வாபஸ் வாங்கப்பட்டன. இவையனைத்தும் உபி தேர்தலை மனதில் வைத்தே அரங்கேறிய பாஜகவின் சாகசங்கள். தேர்தல் தேதி வெளியான பிறகு தான் ஆட்டம் வெறித்தனமாக மாறியது. நொடிக்கு நொடி அதிரடி சம்பவங்கள் அரங்கேறின.
பாஜகவிலிருந்து ஒவ்வொருவராக உருவிக் கொண்டிருக்கிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இதுவரை மூன்று அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்களை வளைத்து போட்டுள்ளார். இன்னும் பல எம்எல்ஏக்கள் அவர் பக்கம் தாவப் போவதாகவும் செய்திகள் வட்டமடிக்கின்றன. எப்போதுமே பாஜக தான் இந்த வேலையெல்லாம் பார்க்கும். ஆனால் இம்முறை அகிலேஷ் யாதவ் முந்திக் கொண்டு ஓபிசி தலைவர்களை இழுத்து போட்டார். இன்னொரு புறம் மாயாவதி தனித்து போட்டி என அறிவித்துவிட்டார். அகிலேஷ் ஓபிசி வாக்குகளை பிரித்தால், மாயாவதி எஸ்சி, எஸ்டி வாக்குகளை பிரிக்க வலை விரிக்கிறார்.
இவர்களை சரிக்கட்டவே நேரம் போதாது. காங்கிரஸ் தரப்பிலோ மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி இறங்கி ஆடுகிறார். சில தினங்களுக்கு முன் அவர் வெளியிட்ட 125 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் பெரிதும் பேசுபொருளானது. பாஜக முன்னாள் எம்எல்ஏவால் பாலியல் வன்கொடுமை செய்யப்ப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாயாரை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். அதேபோல பாஜகவால் யாரெல்லாம் அடக்குமுறைக்கு ஆளானார்களோ அவர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு பல பக்கம் அடி என்பது போல பாஜகவுக்கும் யோகிக்கும் அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது.
இச்சூழலில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் லிஸ்ட்டை பாஜக வெளியிட்டுள்ளது. 1 தொகுதிக்கு மட்டூம் அறிவிக்கப்படவில்லை. இந்த லிஸ்டின் சுவாரஸ்யமே யோகியின் பெயர் இருப்பது தான். ஆம் இந்தத் தேர்தலில் யோகி களமிறங்குகிறார். அதுவும் அவரின் ஆஸ்தான தொகுதியான கோரக்பூரில். அவரை 5 முறை மக்களவை எம்பியாக்கியது கோரக்பூர் தொகுதி தான். 2017ஆம் ஆண்டு உபி தேர்தலில் வெற்றிபெற்ற பின் எம்பி பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சராக பதவியேற்றார். மேலும் சட்ட மேலவையில் உறுப்பினராக்கப்பட்டு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் யோகிக்கு முதல் சட்டப்பேரவை தேர்தல் இது தான்.