• June
    25
    Tuesday

Main Area

Main



பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்; எங்கிருந்து எங்கு?-முழு விவரம்

buses
buses
Loading...

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இன்று மாலை முதல் இயக்கப்படுகின்றன.

சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள், பொதுவாகவே பண்டிகைகளை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் தமிழர்களின் முக்கிய பண்டியான பொங்கல் திருநாள் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலை சொந்த ஊர்களில் கொண்டாடும் பொருட்டு ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து கிளம்பி செல்வர். இதனால் சென்னை பேருந்து நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். இதனை சமாளிக்க ஆண்டு தோறும் அரசு சார்பில் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 11-ம் தேதி (இன்று) முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையிலிருந்து மட்டும் மொத்தம் 14,263 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு 9-ம் தேதி திறக்கப்பட்டது. சென்னையில் மொத்தம் 30 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டன. அதேபோல், ஆன்லைனில் டிக்கட் முன்பதிவு நடைபெற்றது. இதுவரை ஒரு லட்சத்து 25ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டிக்கெட் கட்டணமாக 6 கோடியே 8 லட்சத்து 82ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இன்று மாலை முதல் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் சானிடோரியத்திலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரா மார்க்கம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஈசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பூவிருந்தவல்லியிலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் ஓசூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நெய்வேலி, கோவை, எர்ணாகுளம், பெங்களூரு உள்ளிட்ட இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்த பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பயணம் மேற்கொள்ள வேண்டும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்று சாலை வழியாக வண்டலூர் செல்லும்.

2018 TopTamilNews. All rights reserved.