• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

மலேசியாவுக்கு செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள் கைது

agathigal

கோலாலம்பூர்: படகு மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய இந்த ரோஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

“முகாம்களிலிருந்து தப்பி வந்ததாக அவர்கள் கூறுகின்றனர். மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் வந்ததாக கூறினர்” என மியான்மரின் தென் கடலோர பகுதியின் அரசு இயக்குனர் மோ ஜா லட் கூறியிருக்கிறார். மேலும், அவர்களை மீண்டும் முகாம்களுக்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இதே போல், கடந்த நவம்பர் 16-ம் தேதி மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்த 106 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற இவர்கள், படகு என்ஜின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தனர். இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மலேசியா செல்ல முயற்சித்த 80 ரோஹிங்கியாக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

மியான்மர் கடல்பகுதியில் மழையின்றி அமைதியான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.  அந்த வகையில், சமீபகாலமாக படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 

கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டைக்  காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதே போல், முந்தைய வன்முறைகளில் வெளியேறிய 40,000த்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

             
2018 TopTamilNews. All rights reserved.