ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று - ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

 
SRIvsAFG

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோத வேண்டும். இந்த சூப்பர் 4 சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. சார்ஜாவில் இன்று இரவு நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, லீக் சுற்றில் இலங்கை மற்றும் வங்காளதேசத்தை புரட்டியெடுத்தது. இலங்கையை வெறும் 105 ரன்னில் அடக்கி அந்த இலக்கை 10.1 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தது ஆப்கானிஸ்தான். இந்நிலையில் அதே உத்வேகத்துடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.  இலங்கை அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றாலும் அடுத்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து சூப்பர்4 சுற்றுக்குள் கால்பதித்தது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டி வருகிறது.