ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா

 
Adam Zamba

டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின. குரூப்-1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்குள் நுழையும்.

australia

இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று தெரியவந்துள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள போட்டிக்கான புதிய வழிகாட்டுதல்படி, கொரோனா தொற்றுடன் ஒரு வீரர் களம் இறங்க அனுமதி உண்டு. அந்த வீரர் அணியினருடன் செல்லாமல் தனியாக பயணிக்க வேண்டும். ஆனால் இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் சேர்க்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விளையாடினார்.