தல தோனிக்கு இன்று பிறந்தநாள் - உற்சாகத்தில் ரசிகர்கள்

 
தோனி 1929 மணிக்கு ஏன் ஓய்வை அறிவித்தார் தெரியுமா? #Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனும் ஆன மகேந்திர சிங் தோனி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

தல தோனி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981ம் ஆண்டு பிறந்தார். பள்ளி பருவத்தில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த தோனி சிறந்த கோல்கீப்பரா விளங்கி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு விக்கெட் கீப்பர் ஒருவர் தேவைப்பட்ட நிலையில், கோல்கீப்பரான தோனியை விக்கெட் கீப்பராக நியமித்துள்ளார் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். அப்போது தொடங்கியது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை. விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய தோனி, பள்ளி கிரிக்கெட்டில் இருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார். பின்னர் மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய தோனி, ரெயில்வே அணிக்கு தேர்வானார். அதிலும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய தோனி இந்திய அணிக்கு தேர்வானார். 2004ம் ஆண்டு முதல் முதலாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களை திணறடித்த தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இந்திய ரசிகர்களை அவர் வசப்படுத்தியது. இந்நிலையில், 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. இவரது தலைமையில் தான் இந்திய அணி, அதே ஆண்டில் 20 ஓவர் உலககோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. 

dhoni

இதேபோல் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி கோப்பையை வென்றது தோனியின் தலைமையில் தான். இறுதி போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதேபோல் 2013ம் ஆண்டு நடைபெற்ற மின் உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராவி கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்று தந்தார் தோனி. பேட்டிங்கில் மட்டுமில்லாமல் கீப்பிங்கிலும் புகழ் பெற்றவர் தோனி. மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, பின்னால் இருக்கும் ஸ்டம்பயே பார்க்காமல் ரன் அவுட் செய்வது உள்ளிட்ட பல அசாத்திய திறமைகளால் சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்கினார் தோனி. கடைசியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இதனையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை அணிக்காகவும் தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. 

Dhoni

இந்நிலையில் தோனி இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.