மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பு.... என்ன சொல்ல போகிறார் தோனி? - ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

 
dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று மதியம் 2 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். 

தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி  2004ம் ஆண்டு முதல் முதலாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார்.  2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனி அதே ஆண்டில் 20 ஓவர் உலககோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. இதேபோல் 2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி கோப்பையை வென்றது தோனியின் தலைமையில் தான்.  இதேபோல் 2013ம் ஆண்டு நடைபெற்ற மின் உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராவி கோப்பையையும் இந்திய அணிக்கு பெற்று தந்தார் தோனி. இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து, அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த மகேந்திரசிங் தோனி, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வினை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர், சென்னை அணியின் கேப்டனாக உள்ளார்.  இதுவரை சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி. 

dhoni

இந்நிலையில், தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘ஒரு உற்சாகமான செய்தியை இன்று மதியம் 2 மணிக்கு உங்களிடம் பகிர உள்ளேன்.. சந்திப்போம்... என குறிப்பிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து அது என்ன செய்தியாக இருக்கும் என பலரும் கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறார்கள். அதில் பலர் பதிவிட்டுள்ளது என்னவென்றால், தோனி நாளை இரண்டாவது குழந்தை குறித்த அறிவிப்பைத்தான் வெளியிடுவார் என கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதேபோல் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளார எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.