இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி

 
eion morgan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்தை சேர்ந்த இயான் மோர்கன் பின்னர் இங்கிலாந்தில் குடிபெயர்ந்து அந்நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். 2006 ஆண்டு முதல் முதலாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார். பின்னர் 2009ம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிராக, டி20 போட்டியில் களமிறங்கினார். இதேபோல் டெஸ்ட் போட்டியில் 2010ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கினார். இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இயான் மோர்கன் 2 சதங்கள் உட்பட 700 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 14 சதங்கள் உட்பட 7,701 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல் டி20 போட்டிகளை பொறுத்தவரையில் 115 போட்டிகளில் விளையாடி 2458 ரன்கள் சேர்த்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் இயான் மோர்கன் விளையாடியுள்ளார். கடைசியாக 2021ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்தார் இயான் மோர்கன்.

Eion morgan

இங்கிலாந்து அணிக்காக பேட்டிங்கில் மட்டுமின்றி கேப்டன்சியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் இயான் மோர்கன். ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து அணியை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ள அவர், 2019ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வென்று கொடுத்தார்.   தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வந்த இயான் மோர்கன் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்து வந்தார். இந்நிலையில், இயான் மோர்கன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.