இந்த சைன்டிஸ்ட் அணியை வெற்றி பெற வைத்து விட்டார் - அஸ்வினுக்கு சேவாக் புகழாரம்

 
Sewag and r ashwin

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சைன்டிஸ்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். 

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.  அந்த அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மோமினுள் 84 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியா இந்திய அணி முதல் இன்னிங்சில் 314 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 93 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 87 ரன்களும் எடுத்தனர். 

ashwin

இதனையடுத்து வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 145 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. 4வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கிய நிலையில், வெற்றிக்கு 100 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
  
இந்நிலையில், அஸ்வினை சைன்டிஸ்ட் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான வீரேந்தர் சேவாக் பாராட்டியுள்ளார். அவர்தனது டுவிட்டர் பதிவில், 'இந்த சைன்டிஸ்ட் இந்திய அணியை வெற்றி பெற வைத்து விட்டார். இந்த போட்டோ எனக்கு எப்படியோ கிடைத்தது. அஸ்வின் அற்புதமான இன்னிங்சை விளையாடியுள்ளார். ஷ்ரேயாஸ் உடனான அவரது பார்ட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது' என்று கூறியுள்ளார்.