டி20 உலக கோப்பை - ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இன்று மோதல்

 
Aus vs Nz

டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் சூப்பர் 12 போட்டியில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8வது டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த  16ம் தேதி தொடங்கிய போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை  நடைபெறவுள்ளது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதேபோல் தகுதி சுற்றில் விளையாடிய 8 அணிகளில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர்12 சுற்றில் மொத்தமுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

australia

குரூப்1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப்2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று சூப்பர் 12 சுற்று நடைபெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. 
இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டி நடைபெறவுள்ள சிட்னி மைதானத்தில் 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் இன்றைய போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பெர்த்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.