தினேஷ் கார்த்திக் அபாரம் - டெல்லியை வீழ்த்தி பெங்களூரு 3-வது வெற்றி

 
Dinesh karthck

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

RCB

பெங்களூர் அணி தொடக்கத்தில் திணறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. தொடர்க்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அனுஜ் ராவத் ரன் எதுவும் எடுக்காமலும், பாப் டூப்ளெசிஸ் 8 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி 12 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய மெக்ஸ்வேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். பிரபு தேசாய் 6 ரன்களில் அவுட்டானார். 55 ரன்கள் எடுத்திருந்த போது மெக்ஸ்வேல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார். அவர் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. 

Warner

இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் சொதப்பியது. பிரித்வி ஷா 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். அவர் 66 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஸ் 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். கேப்டன் ரிஷப் பந்த் 34 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ராவ்மன் பவுல் வழக்கம் போல் சொதப்பினார். அவர் ரன் எதுவும் எடுக்காமலயே வெளியேறினார். இறுதியாக 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது.