கொல்கத்தாவை கொத்துக்கறி போட்ட லக்னோ - 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

 
lsg

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. 

புனேயில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரெயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து லக்னோ அணி முதலாவதாக பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் ஒரு பந்துகூட சந்திக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, டி காக்குடன் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி காக் அரைசதம் அடித்து அவுட்டாகினார். தீபக் ஹூடா 42 ரன்களிலும், குர்ணால் பாண்டியா 25 ரன்களிலும் வெளியேறினார். ஸ்டோனிஸ் 28 ரன்களும், ஹோல்டர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 

Russel

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வழக்கம் போல் தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபா இந்திராஜித் ரன் எதுவும் எடுக்காமலயே அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களிலும், ஆரோன் பின்ச் 15 ரன்களிலும் வெளியேறினார். நித்திஷ் ராணா 2 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும் நடையை கட்டினர். அதிரடி காட்டிய ஆந்திரே ரஸ்ஸல் 45 ரன்களிலும், சுனில் நரேன் 22 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 14,3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் லக்னோ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.