கைக்கு வந்த வெற்றியை நழுவவிட்ட சென்னை - 11 ரன்களில் தோல்வி

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. கேப்டன் மயங் அகர்வால் 18 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், தவான் மற்றும் ராஜபக்சே ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராஜபக்சே 42 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக வந்த லிவிங்ஸ்டன் 7 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 88 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 

PBKS

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வழக்கம் போல், தொடக்கம் முதலே சொதப்பியது. ராபின் உத்தப்பா ஒரு ரன் மட்டுமே எடுத்து வெளியேறிய நிலையில், அடுத்த வந்த மிட்செல் சாண்ட்னர் 9 ரன்களிலும், சிவம் தூபே 8 ரன்களிலும் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய ருத்ராஜ் கெய்க்வார் 30 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு அரைசதம் அடித்து போட்டியை சென்னை அணியின் பக்கம் திருப்பினார். 

rayudu csk

குறிப்பாக சந்தீப் சர்மா வீசிய 16வது ஓவரில் 22 ரன்கள் அடித்தார். 16 ஓவர் முடிவில் சென்னை அணி 141 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து 24 பந்துகளில் 47 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்நிலையில் அம்பத்தி ராயுடு அவுட்டாகி வெளியேறியதால், போட்டி பஞ்சாபின் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை எதிர்கொண்ட தோனி முதல் பந்தை சிக்சருக்கு விரட்டிய நிலையில், இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தையும் சிக்சருக்கு விரட்ட முயற்சித்த நிலையில், பந்து இன்சைட் எட்ச் ஆகி பீல்டரிடம் கேட்ச் ஆனது. இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் சென்னை அணியின் ஃப்ளே ஆஃப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.