பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

 
RCB

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பட்டேல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் போட்டியில் பாப் டூபிளெஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூபிளெஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

KKR

இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, நித்திஷ் ரானாவும் 10 ரன்களில் வெளியேறினார். இவ்வாறு அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து, 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்ஸெல் 25 ரன்கள் எடுத்தார். 

RCB

இதனையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது. அனுஜ் ராவத் டக் அவுட் ஆன நிலையில், கேப்டன் பாப் டூபிளெசிஸ் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 12 ரன்களிலும், டேவிட் வில்லே 18 ரனளிலும் வெளியேறினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேர்பன் ருத்தர்போர்ட் 28 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதேபோல் சபாஷ் அகமது 27 ரன்கள் எடுத்தார். இறுதியாக பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.