பட்லர் அதிரடி! சாம்சன் சரவடி! - டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்

 
RR

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. 

Butler

ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. தேவ்தத் படிக்கல் 54 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினார். இருந்த போதிலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் இந்த சீசனில் மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 116 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி காட்டினார். அவர் 19 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. 

Warner

இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே சொதப்பியது. அதிரடியாக விளையாடிய வார்னர் 28 ரன்களில் வெளியேறினார். அடுத்த வந்த சர்பராஸ் கான் ஒரு ரன்களில் வெளியேறினார். பிரித்வி ஷா 37 ரன்களிலும், கேப்டன் ரிஷப் பந்த் 44 ரன்களிலும், லலித் யாதவ் 37 ரன்களிலும் வெளியேறினர். கடைசி வரை போராடிய ராவ்மன் பவுல் 36 ரன்கள் சேர்த்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.