வெற்றிக்காக போராடும் மும்பை - இன்று லக்னோ அணியுடன் பலப்பரீட்சை

 
Mumbai

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

15-வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 36 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 37-வது லீக் போட்டி நடைபெறுகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

LSG

லக்னோ அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4ல் வெற்றியும், 3 போட்டியில் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் தோல்வி அடைந்துள்ள லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறி செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில், கேப்டன் கே.எல்.ராகுல், டி காக், ஸ்டோனிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, அயூஷ் பதோனி உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், குருணல் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர்.  

MI

மும்பை அணியை பொறுத்தவரையில் இந்த ஐபிஎல் சீசனில் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளிலுமே தோல்வியே அடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை(5 முறை ) சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான மும்பை, நடப்பு சீசனில் ஒரு வெற்றியை கூட பெறாதது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே அந்த அணி பலவீனமாக உள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை இரண்டையும் வலுப்படுத்தி முதல் வெற்றியை பெற முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.