இன்றைய ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்-லக்னோ அணிகள் மோதல்

 
LSGvsSRH

ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை 11 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், 12-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

SRH

முதல் போட்டியில் குஜராத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய லக்னோ அணி இரண்டாவது போட்டியில் 211 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதே உத்வேகத்தில் உள்ள லக்னோ அணி இந்த போட்டியிலும் அதிரடி காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் கே.எல்.ராகுல், டீ காக், இவன் லீவிஸ், ஹூடா, பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதேபோல் பந்துவீச்சில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், குருணல் பாண்டியா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். 

lsg

ஐதராபாத் அணிக்கு இது இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணி அந்த போட்டியில் 210 ரன்கள் குவித்தது. இதனால் இன்றைய போட்டியில் பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த ஐதராபாத் அணி முயற்சிக்கும். பந்துவீச்சை பொறுத்தவரையில் அந்த அணியில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இதேபோல் பேட்டிங்கில் கேப்டன் கேன் வில்லியம்சன், மார்க்ராம், நிகோலர் பூரான், ராகுல் திரிபாதி ஆகியோர் பலம் சேர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.