ஐபிஎல் டி20 போட்டி எப்போது தொடங்கும்.. வெளியான அறிவிப்பு..

 
IPL 2022

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி, மே 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுவாக கிரிக்கெட்டுகென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் ஐபிஎல் என்றால் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள்.  அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் டி20  கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்குகிறது.  மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த 15வது ஐபிஎல் போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அறிமுகமாகின்றன.  ஆகையால் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்திருக்கிறது.

IPL 2022

இந்நிலையில்  ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கும் என அறிவித்தார். மேலும்  மும்பை, நவி மும்பை, புனே ஆகிய 3 இடங்களில் உள்ள மைதானங்களில் லீக் ஆட்டங்கள் நடைபெறுவதாகவும்  தெரிவித்தார். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லைக் கூறினார்.  அதே போல் இறுதிப் போட்டி  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

IPL

 கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலில் 40 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருக்கும் நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட  வாய்ப்பு இருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஐ.பி.எல். சீசனில் புதிதாக லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்பதால், ஐ.பி.எல். போட்டியின் ஆட்டங்கள் 74 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த அணிகள் விளையாடும் என்பது குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும்  என்றும் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்தார்.