ரிஷப் பந்த் அபாரம் - இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா

 
team india

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது. 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இறுதியாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் மூன்றாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலாவதாக பேட்டிங்க் செய்து விளையாடியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 60 ரன்கள் சேர்த்தார். 

champion

இதனையடுத்து 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் இறுதியில் சிறப்பாக விளையாடியது. ஷிகர் தவான் (1), ரோகித் சர்மா (17), விராட் கோலி(17) சூர்யகுமார் (16) உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பந்த் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டதோடு, வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஹர்த்திக் பாண்டியா 71 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரிஷப் பந்து சதம் அடித்து அணியின் வெற்றி பெற வைத்தார். 113 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது.