மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

 
ind women

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. டி20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்திய அணி, தனது முதல் மூன்று லீக் போட்டியில் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளை வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி வலுவாக உள்ள நிலையில், பாகிஸ்தான் நேற்றைய போட்டியில் தாய்லாந்து அணியுடன் தோல்வி அடைந்து அதிர்ச்சியில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சர்வதேச அரங்கில் இவ்விரு அணிகள் 12 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 10 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு போட்டி தொடங்குகிறது.