மகளிர் ஆசிய கோப்பை : இந்தியா-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

 
ind women

8வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

8-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. டி20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 7 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று காலை நடைபெற்ற முதல் லீக் போட்டியில் வங்கதேசமும், தாய்லாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று மதியம் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்தியா 16 ஆட்டத்திலும், இலங்கை 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.