ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் - இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்

 
ind test

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்றது. வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் தரவரிசையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை வசப்படுத்தி உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி 13 டெஸ்ட்களில் 9 வெற்றி ஒரு தோல்வி, 3 டிராக்களுடன் 120 புள்ளிகளுடன் 76.92% என்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி வங்கதேசத்தை வென்றதன் மூலம் 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 டிரா என 87 புள்ளிகளுடன் 55.77% எடுத்து 2-ம் இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், 4வது இடத்தில் இலங்கையும் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.