டி20 தொடரிலும் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா? - இன்று முதல் டி20 போட்டி

 
INDvsNZ

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், அதில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஒருநாள் தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து டி20 தொடர் நடைபெறவுள்ளது. முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று இரவு நடக்கிறது.   ஒருநாள் தொடரில் இடம்பெற்ற கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஒருநாள் தொடரில் ஆடிய ஒரு சில வீரர்கள் மட்டுமே 20 ஓவர் அணியில் இடம்பெற்று உள்ளனர்.  ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரில் வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு 20 ஓவர் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. நியூசிலாந்து 20 ஓவர் அணிக்கு சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.