காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - வெள்ளி வென்ற இந்தியா

 
indw

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில், இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோல்வி அடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. 
  
22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியில் முதலாவதாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் குரூப் பி பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றது. இதேபோல் அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் பார்படாஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.  இதனையடுத்து அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் மோதிய இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

INDW

இதனிடையே இறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.  அதிகபட்சமாக தொடக்க  பெத் மூனி 61 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறீயது. இந்திய அணி 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம்  9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. இறுதிப்போட்டியில்  தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.