இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு

 
ashwin

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 4 போட்டியில் ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில் இரண்டில் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான ஒரு பிரிவினர் ஏற்கனவே இங்கிலாந்து சென்று பயிற்சியை தொடங்கியுள்ளனர். 

ashwin

இதேபோல் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் கடந்த 19ம் தேதி போட்டி முடிவடைந்தவுடன் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினும் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில், விமான ஏறுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அஸ்வின் இங்கிலாந்து செல்லவில்லை. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அஸ்வின். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்வின்  ஜூன் 24 அன்று கவுண்டி மைதானத்தில் தொடங்கும்  பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும்,  பூரண குணமடைந்த பின், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி அஸ்வின் இங்கிலாந்து புறப்படுவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.