விராட் கோலியை டி20 அணியிலிருந்து நீக்கலாம் - கபில் தேவ்

 
kabil dev

அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்துவீச்சாளரை டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கும் போது, டி20 அணியில் இருந்து விராட் கோலியை ஏன் நீக்க முடியாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இரவு 10.30 மணிக்கு(இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த விராட் கோலி, பும்ரா, ரிஷப் பந்த் உள்ளிட்டோர் இன்றைய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்டவர்களை அணியில் சேர்த்தால் யாரை அணியில் இருந்து தூக்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இஷான் கிஷானை தூக்கினாலும் மற்றொரு வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் தான் இதற்கு பலியாடு ஆகலாம் என கூறப்படுகிறது. 

virat

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையே நீக்க முடியும் போது ஏன் டி20 அணியில் இருந்து கோலியை நீக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். உலக தரவரிசையில் 2ம் இடத்தில் இருக்கும் அஸ்வினை டெஸ்ட் அணியில் தேர்வு செய்யாமல் உட்கார வைக்க முடியும்ம் எனில் விராட் கோலியை டி20 அணியில் எடுக்காமல் பெஞ்சில் உட்கார வைக்க முடியும் என கூறியுள்ளார். விராட் கோலி தற்போது ஃபார்மில் இல்லை எனும்போது அவருக்காக நன்றாக ஆடும் இளம் வீரர்களை உட்கார வைக்கக் கூடாது எனவும்,  விராட் கோலியை அணிக்குள் வர விடாமல் தங்கள் ஆட்டத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய பார்மின் அடிப்படையில்தான் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனவும், செல்வாக்கின் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்யக் கூடாது,  எனவும் கூறியுள்ளார். கபில் தேவின் இந்த கருத்து இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.