"வருங்காலம் வசந்த காலம்".. உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து!

 
மோடி

2011ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா சீனியர் கிரிக்கெட் அணி எந்தவொரு உலகக்கோப்பையையும் வெல்லவில்லை. ஒவ்வொரு முறையும் அரையிறுதி வந்து கோட்டை விடுகிறது. இல்லையென்றால் பைனல் வந்து கைநழுவவிடுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலோ லீக் சுற்றோடு நடையைக் கட்டியது இந்திய அணி. சீனியர்கள் கைவிட்டாலும் ஜூனியர்கள் ரசிகர்களை ஏமாற்றுவதில்லை. இன்று சீனியர் அணியில் இடம்பெற்றிருக்கும் பலரும் ஜூனியர் அணியில் இடம்பெற்றவர்கள் தான். 

Yash Dhull's Team India are ICC U19 World Cup 2022 champions, beat England  by four wickets | Cricket News | Zee News

அந்த வகையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை எப்போதுமே கவனம் பெறும். குறிப்பாக இந்திய அணி மீதே அனைவரது கண்களும் இருக்கும். ஏனென்றால் 13 உலகக்கோப்பை தொடர்களில் 7 முறை பைனலுக்குச் சென்று 4 கோப்பைகளை தன்வசப்படுத்தியிருந்தது இந்தியா (2000,2008,2012,2018). நேற்றோடு சேர்த்தால் 5 கோப்பைகள். அதிகபட்சமாக ஆஸ்திரேலியா மட்டுமே மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. அந்த வகையில் ஜூனியர் லெவல் உலகக்கோப்பையில் மிகவும் வெற்றிக்கரமான அணியாக வலம் வந்தது இந்திய அணி. 

அணியில் நட்சத்திர வீரர்கள் என யாருமில்லை. ஆனால் அனைவரின் கூட்டு உழைப்பால் 5ஆவது உலகக்கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு போட்டியில் யாராவது சொதப்பினால் இன்னொருவர் கைதூக்கி விடுவார். இவ்வாறு ஒவ்வொரு போட்டியிலும் ஒரு மேட்ச் வின்னர்கள் இருந்தார்கள். பவுலிங்கிலும் சரி பேட்டிங்கிலும் சரி இதே நிலை தான் அனைத்து போட்டிகளும். அணியின் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் பணியைச் சிறப்பாக செய்து மாபெரும் வெற்றியை ருசித்து பார்த்துள்ளனர்.


முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை இங்கிலாந்தால் தாக்குபிடிக்க முடியவில்லை. ராஜ் பவா 5 விக்கெட்டுகளையும் ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியாவின் கையை ஓங்க செய்தனர். மிகக் குறைந்த இலக்கு என்பதால் இந்திய நடுவரியை வீரர்கள் மிக நிதானமாக ஆடினர். ரஷீத், நிசாந்த் சிந்து ஆகிய இருவரும் அரைசதம் கடக்க, பேட்டிங்கிலும் தன் பங்கை கொடுத்தார் ராஜ் பவா. இறுதியில் கீப்பர் தினேஷ் பனா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு கோப்பையை வசமாக்கினார். 


இந்த வெற்றியை இந்தியாவே கொண்டாடி வருகிறது. பலரும் இந்திய இளம் வீரர்களுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இந்திய இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்தியா ஜூனியர் அணி உலகக்கோப்பை வென்றதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அனைத்து வீரர்களும் அபராமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்கள். வருங்கால இந்திய அணி பாதுகாப்பான மற்றும் திறமையான கைகளில் உள்ளது என்பதை இந்த வெற்றி குறிக்கிறது” என பாராட்டியுள்ளார்.