காயம் குணமடைய 6 மாதம் ஆகலாம் - ஐபிஎல் தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகல்?

 
rishap pant

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். அந்த காரை ரிஷப் பந்தே இயக்கிச் சென்றுள்ளார்.  டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. பிஎம்டபிள்யூ காரை ரிஷ்ப்  பண்ட்டே  ஓட்டிச் சென்றதாகவும், மிக வேகமாக காரை ஓட்டிச் சென்றதாலும், பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

rishap

இதனிடையே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக ரிஷ்ப் பந்த் டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷப் பந்த் உடல்நிலையை கண்காணிக்க டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) குழு மேக்ஸ் மருத்துவமனைக்கு செல்வதாகவும், தேவைப்பட்டால் அவரை டெல்லிக்கு  மாற்றப்போவதாகவும் டிடிசிஏ இயக்குநர் ஷியாம் சர்மா கூறி உள்ளார்.  

இதனிடையே ரிஷப் பந்தின் உடல்நிலை குறித்து டாக்டர் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படாமல் பந்த் நன்றாக இருக்கிறார். அவருடன் அவரது தாயார் மருத்துவமனையில் இருக்கிறார். தசைநார் காயத்தில் இருந்து குணமடைய குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். அது கடுமையானதாக இருந்தால், இன்னும் அதிக காலம் எடுக்கலாம். இதன் காரணமாக ரிஷப் பந்த் 16வது சீசன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகலாம் என கூறப்படுகிறது. இவர் டெல்லி அணியின் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.