மிரட்டிய மில்லர், டூசன்! இமாலய இலக்கை எட்டிப்பிடித்த தென் ஆப்ரிக்கா

 
ind vs sa

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. ருத்துராஜ் கெய்க்வாட் 23 ரன்களில் ஆட்டமிழக்க இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அடுத்த வந்த ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.  கேப்டன் ரிஷப் பந்த் 29 ரன்களில் வெளியேறிய நிலையில், கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ஹர்த்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. 

ishan kishan

இதனையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், பின்னர் சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் டெம்பா பாவுமா 10 ரன்களிலும், அடுத்து வந்த டுவைன் பிரிட்டோரியஸ் 29 ரன்களிலும் வெளியேறினர். இதேபோல் டீ காக் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த டேவிட் மில்லர் மற்றும் டூசன் ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டதோடு, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். டேவிட் மில்லர் 64 ரன்களும், டூசன் 75 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.