தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 2வது போட்டியிலும் இந்தியா தோல்வி

 
ind vs rsa

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கட்டாக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பாவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இஷான் கிஷான் 34 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 5 ரன்களிலும், கார்த்திக் பாண்டியா 9 ரன்களிலும் வெளியேறினர். இதனிடையே ஸ்ரேயஸ் ஐயர் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த அக்‌ஷர் பட்டேல் 10 ரன்களில் நடையை கட்டினார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. 

ind vs rsa

இதனையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தேன் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் ப்ரிட்டோரியஸ் ஆகியோர் தலா 4 ரன்களில் வெளியேறிய நிலையில், டூசன் 1 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து வந்த க்ளாசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார். இதனிடையே டெம்பா பவுமா 35 ரன்களில் வெளியேறினார். கிளாசன் 81 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 21 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.