லக்னோவை பந்தாடிய பெங்களூரு - 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

 
RCB

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் பாப் டூபிளசிஸ் தலைமியிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக பெங்களூரு அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 

இதனையடுத்து 127 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீரரான கெயில் மையிஸ் 2 பந்துகளில் ரன் எதுவும் (0) எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் வெளியேறினார். தொடக்க வீரர் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ அணி, இறுதியில் 19.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.