காலில் ஏற்பட்ட திடீர் காயம் - இன்றைய போட்டியில் விளையாடுவாரா தோனி?

 
dhoni

சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காலில் திடீர் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று இரவு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த சீசன் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், இந்த முறை கட்டாயம் கோப்பையை வெல்ல அந்த அணி முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பலம் வாய்ந்த இரு அணிகள் முதல் லீக் போட்டியிலேயே மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

csk

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காலில் திடீர் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கால் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக அகமதாபாத்தில் நடந்த பயிற்சியில் தோனி பங்கேற்கவில்லை இதனால் முதல் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் முதல் போட்டியில் தோனி விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.  காயம் காரணமாக ஒருவேளை தோனி ஆடாவிட்டால் கான்வே அல்லது ராயுடு கீப்பிங் செய்வார்கள் என்றும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.