குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றி

 
GTvsDC

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 44வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெல்லி அணி, குஜராத் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீர்குலைந்தது. 20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.  

இதனையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. கடைசி 2 ஓவர்களில் குஜராத்தின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா வீசினார். இதில் முதல் 3 பந்துகளில் 3 ரன் எடுத்த நிலையில் அடுத்த 3 பந்துகளில் திவேதியா 3 சிக்சர்கள் அடித்தார். இறுதி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா வீசினார். துல்லியமாக பந்து வீசிய இஷாந்த் ஷர்மா,  6 ரன் மட்டுமே வழங்கி வெற்றியை தேடித்தந்தார். இதனால் டெல்லி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.