ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

 
indvspak

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை ஆசியர் கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வருகிறது. 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரை இரண்டு லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 3வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. 

indvspak

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள 3வது லீக் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் லீக் போட்டியில் நேபாள அணியை ஊதி தள்ளிய பாகிஸ்தான் அணி அதே உத்வேகத்துடன் இந்தியாவை சமாளிக்க தயாராகி வருகிறது. இதேபோல் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்க இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் இரு அணிகளும் இன்று மோதவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.