சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்...இந்திய அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார்.
==========


