இன்றும் சோதிக்கும் மழை! இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடங்குவதில் தாமதம்

 
match rain

மழை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை பெய்வதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றன. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் கடைசி இரண்டு இடங்களை பிடித்த ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் வெளியேறின. முதல் நான்கு இடங்களை பிடித்தா பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

ind rain

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலவதாக பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அற்புதமாக விளையாடு அரைசதம் விளாசினர். ரோகித் சர்மா 56 ரன்னிலும், சுப்மன் கில் 58 ரன்னிலும் வெளியேறினர். 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் களமிறங்கி விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாகியும் மழை விடாததால் ஆட்டம் ஒத்திவைகப்பட்டது. இதன் காரணமாக மாற்று நாளான இன்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 8 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்றும் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவேளை நாள் முழுவதும் மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.