ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய அணி!

 
IND IND

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர் இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20 முதல் 24 வரையும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  டி20 போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அயர்லாந்து அணியுடன் இந்தியா மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியின் அயர்லாந்து பயணத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது. ஆகஸ்டு 18-ந் தேதி முதல் 20 ஓவர் போட்டியும், 20-ந் தேதி 2-வது ஆட்ட மும் ஆகஸ்டு 23-ந் தேதி 3-வது மற்றும் கடைசி போட்டியும் நடக்கிறது. அயர்லாந்தில் உள்ள மலாஹிட் நகரில் 3 போட்டிகளும் நடக்கிறது.