"வெல்கம் கிங்" - மீண்டும் இந்திய ஜெர்சியில் ஜொலிக்கும் "மென்டார்" சிங் தோனி!

 
தோனி

டி20 உலகக்கோப்பை திருவிழா நேற்று தொடங்கியுள்ளது. 1 மாதத்திற்கு முன்பாகவே உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ அறிவித்தது. அணி தேர்வு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே அமைந்துள்ளது. ஆனால் கூடுதலாக ஒரு சர்ப்ரைஸையும் வழங்கியது பிசிசிஐ. அந்த ஸ்பெஷலான சர்ப்ரைஸ் தோனி தான். மீண்டும் தோனி இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். வீரராக அல்ல மென்டாராக. அதாவது ஆலோசகராக ப்ளூ நிற ஜெர்சியில் வருகை புரிந்திருக்கிறார் தோனி. இந்திய ரசிகர்களுக்கு இதைவிட வேறு என்ன அன்பளிப்பு வேண்டும். தோனி

2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தான் தோனியைக் கடைசியாக இந்திய ஜெர்சியில் பார்த்தது. அதற்குப் பிறகு இப்போது தான் இந்திய அணியுடன் இணையவிருக்கிறார். உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற தோனி இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய இழப்பு என ரசிகர்கள் வருத்தம் கொண்டிருந்தனர். அது யாருக்கு கேட்டதோ இல்லையோ பிசிசிஐக்கு கேட்டுவிட்டது. ரசிகர்களின் மனக்குமுறல்களைப் போக்க தோனியை ஆலோசகராக நியமித்துள்ளது. இதில் கோலியின் விருப்பமும் அடங்கியுள்ளதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

“தோனியை விட வேறு யாரால் சிறப்பாக வழிநடத்த முடியும்?” – புகழ்ந்து தள்ளிய பிசிசிஐ!

தாங்கள் எந்த அணிக்கு கேப்டன் ஆனாலும் எங்களுடைய கேப்டன் தோனி தான் என கோலி அடிக்கடி கூறுவார். அது உண்மை தான் என செயலிலும் செய்துகாட்டிவிட்டார் கேப்டன் கிங் கோலி. இந்திய அணியை வழிநடத்தி செல்ல தோனி மட்டும் தான் மிகச் சிறந்தவர். அவரை விட யாராலும் அதை திறமையாகச் செய்துவிட முடியாது என பிசிசிஐயும் கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக இந்தப் பணிக்காக எந்தவித சம்பளமும் வேண்டாம் என கூறி தோனியின் பெருந்தன்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஐபிஎல் முடிந்த கையோடு தோனி இந்திய அணியின் பயிற்சி மையத்துக்கு வந்துவிட்டார். 


அவர் நெட் பயிற்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பிசிசிஐ மற்றுமொரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதுதான் இணையத்தில் டிரெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த ட்வீட்டில், "கிங் தோனியை அன்போடு வரவேற்கிறோம். புதிய ரோலில் இந்திய அணியுடன் மீண்டும் இணைகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாகுபலி படத்தில் ஒரு வசனம் வரும் "உயிரோடு இருக்கும் வரை அவன் எங்கிருந்தாலும் அரசன் தான்” என. இந்த வசனம் தோனிக்கு பொருந்தி போவது ஆச்சர்யப்படுவதற்கில்லை.