பஞ்சாப்பை பஞ்சராக்கிய மும்பை - 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

 
surya kumar yadav

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற்ற லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது.  இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 
 20 ஓவர்களுக்கு 3விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதனையடுத்து தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது.  ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேமரோன் கிரீன் 23 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன் வேகத்தை உயர்த்தியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 71 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.  அடுத்து வந்த திலக் வர்மா, 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.