ஸ்ரேயஸ் ஐயர் அபார ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 5வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பஞ்சாப் அணி முதலாவதாக பேட்டி செய்தது. அந்த அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 97 ரன்களும், பிரியான்ஸ் ஆர்யா 47 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் இறுதியில் கோட்டை விட்டது. குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 74 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.