27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அபாரமாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களான பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர் நிதானமாக ஆடிய நிசாங்காவை 45 ரன்களில் வெளியேற்றினார் அக்சர் படேல்.
இதன்பிறகு வந்த குஷால் மெண்டிசும் மற்றும் சிறப்பாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்கா பெர்னாண்டோ 96 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக ஆடிவந்த குசால் மெண்டிஸ் 59 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் 35 ரன்களிலும்,கோலி 20 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.26.1 ஓவர் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 138 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.


