ஐபிஎல் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்ற சீனிவாசன்

 
mk stalin

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளரான சீனிவாசன் கோப்பையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி கடந்த 29ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பில்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.  இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே  மழையின் காரணமாக ஆட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. பின்னர் சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவித்த நிலையில்  கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று நிலை ஏற்பட்டது. ஐந்தாவது பந்தை ஜடேஜா சிக்ஸர் ஆக மாற்றினார் . இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் கடைசி பந்தை பவுண்டரியாக்கி வெற்றியை சிஎஸ்கே வசப்படுத்தினார். இதனால்  5 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை அணி நிர்வாகிகள் கோப்பையோடு இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

csk

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் ரூபா குருநாத் ஆகியோர் மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்வின் போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.