மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது!

 
IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடாரின் இறுதிப் போட்டி மழையால் நேற்று ஒத்திவைக்கப்பட்டதால் இன்று நடைபெறுகிறது.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் அணி இரண்டாது தகுதி சுற்றுக்கு சென்றது. இதேப்போல் வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் இரண்டாது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு அகமதாப்பத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
 
இதனை தொடர்ந்து மாற்றுநாளான இன்று இறுதிப்போட்டி நடைபெறும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று மழையின் குறுக்கீடு இல்லாவிட்டால், 20 ஓவர்கள் கொண்ட முழு போட்டியை ரசிகர்கள் காண இயலும். ஒருவேளை மழையின் குறுக்கீடு இருந்தாலும், 11 மணி வரை காத்திருந்து, 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆனால், மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தால், கோப்பை குஜராத் அணிக்கு வழங்கப்படும். ஏனென்றால், லீக் சுற்றுகள் முடியும் போது புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது. சென்னை அணி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு, விளையாட முடியாமல் போனால் சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.